சேலம் மாவட்டம், மண்மலை பாலக்காடு என்னும் பகுதியில் சதீஷ்குமார்- மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தம்மம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வருண்(3 1/2), வர்ஷா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அந்தத் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் தங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை வருண் திடீரென அழுதான். இதனால் பதறிப்போன சதீஷ்குமார் எதற்காக அழுகிறான் என்று பார்த்தார். அப்போது வருண் அருகே ஒரு பாம்பு கிடந்தது. அதனைக் கண்ட சதீஷ்குமார் உடனடியாக இருசக்கர வாகனத்தில் வருணை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதனை கேட்டு சதீஷ்குமாரும் மீனாவும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.