
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு அவையை விட்டு உரையை படிக்காமல் வெளியேறிவிட்டார். இதனால் ஆளுநர் உரையை சபாநாயகர் படித்தார். ஆளுநர் திடீரென வெளியேறியதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்தது. அதாவது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை எனவும் கடந்த முறையில் ஆளுநர் இதைப் பற்றி கூறிய போதிலும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் தான் ஆளுநர் அவையை விட்டு வெளியேறியதாகவும் விளக்கம் கொடுத்தது. இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர் இது தொடர்பாக தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, தமிழக சட்டசபையில் மரபின் அடிப்படையில் என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் நினைக்கும் நிலையில் அவரால் கண்டிப்பாக அது முடியாது. 59 பக்கங்களில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் உரையாக தயாரிக்கப்பட்ட நிலையில் அதனை படிப்பதற்கு விருப்பமில்லாமல் தான் ஆளுநர் அவையை விட்டு வெளியேறி விட்டார். தேசபக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல் தேசிய கீதம் பிரச்சனையை மீண்டும் கிளப்பியுள்ளார்.
தேசபக்தியில் தமிழ்நாட்டு மக்களை விட ஆளுநர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. சட்டப்பேரவையில் அவமதித்ததற்காக ஆளுநர் தான் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேசப்பற்று தொடர்பாக எங்கள் தலைவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கும் ஆளுநர் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. கடந்த வருடம் தேசிய கீதம் பாடும் வரை அவையில் இருக்காமல் பாதையில் வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தது ஆளுநர்தான். ஆளுநரின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை. மேலும் பதவி காலம் முடிவடைந்த பிறகும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவருக்கு அழகில்லை என்று கூறியுள்ளார்.