துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு அண்ணாமலையும் அண்ணாசாலைக்கு நான் வருகிறேன் தேதியையும் நேரத்தையும் மட்டும் குறித்து சொல்லுங்கள். தனியாகவே வருகிறேன் முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் இறக்குங்கள் என்று கூறினார். அதோடு உதயநிதி ஸ்டாலினை ஒருமையிலும் பேசினார். இதன் காரணமாக தமிழகத்தில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே கருத்து மோதல் என்பது ஏற்பட்டுள்ள நிலையில் இணையதளங்களில் கெட் அவுட் மோடி மற்றும் கெட் அவுட் ஸ்டாலின் ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அண்ணா சாலைக்கு அண்ணாமலை வருவேன் என்று கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸ் ஆக இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிவாலயத்திற்கு வர சொல்லுங்கள். ஒரு செங்கலயாவது அவர் தொட்டு பார்க்கட்டும் என்று கூறினார். மேலும் முன்னதாக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்திற்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றால் அது என்ன ரெட் லைட் ஏரியாவா என்று சர்ச்சையாக பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.