
கனடாவின் ஒட்டாவாவில் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டார் என்று கனடாவில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 25 அன்று இரவு வாடகை அறை பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்ட வான்ஷிகா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசி இரவு 11:40 மணிக்கு அணைக்கப்பட்டதோடு, மறுநாள் நடைபெறவிருந்த முக்கியமான தேர்வையும் தவற விட்டார். அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் தீவிரமாக தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது உள்ளூர் போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்ஷிகாவின் மரணம் கனடாவில் இந்திய சமூகத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில், 21 வயதான இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக உயிரிழந்தார். அதேபோல், ஒட்டாவா அருகே ராக்லேண்ட் பகுதியில் மற்றொரு இந்தியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த வகைத் தாக்குதல்கள் கனடாவில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சனைகளை முன்னிறுத்தியுள்ளது.
வான்ஷிகாவின் மரண விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வான்ஷிகாவின் குடும்பத்தினரும், இந்திய சமூகமும் நியாயத்திற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும், விசாரணை முடிவுகளை முன்னிட்டு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.