
அமெரிக்க ராணுவமும் தென்கொரியா ராணுவமும் இணைந்து கணினி மயமாக்கப்பட்ட கூட்டு பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் நான்கு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “வடகொரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹிம்கியோங் மாகாணத்தில் இருந்து நான்கு ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கடலை நோக்கி ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பறந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியாக அடைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தென் கொரியா அரசு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் “இன்று வடகொரியா ஏவிய ஏவுகணைகள் அணு ஆயுதப் படைகளின் போர் தயார் நிலையை வெளிப்படையாக நிரூபித்துள்ளன. மேலும் அந்த ஏவுகணைகள் எதிரிப்படைகளுக்கு எதிரான கொடிய அணுசக்தி எதிர் தாக்குதல் திறனை வலுப்படுத்துகின்றன. இந்த ஏவுகணை சோதனைகள் குறித்து முழுமையான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அமெரிக்காவுடன் நாங்கள் இணைந்து தீவிரமான ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றோம். பொருளாதாரம் மந்த நிலை மற்றும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனைகளை அதிகரித்திருப்பது நல்லதல்ல” என அதில் கூறப்பட்டுள்ளது.