
தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் மலேரியா பரவும் ஆபத்து இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு கொசுக்களை பரப்பும் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகின்றன. அந்த சமயத்தில் சிக்கன் குனியா மற்றும் மலேரியா வகை காய்ச்சல்களும் அதிக அளவில் பரவுகிறது. இதனை கருதி தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏடிஎஸ் லார்வாக்கள் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டு இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் ஓரிரு முறை மட்டுமே பெய்தால் ஆங்காங்கு மழை நீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டெங்கு காய்ச்சல் பரவலாக கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும் போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்கவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.