
சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தில் சண்முகநாதன் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ரெட் பஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பேருந்தில் பயணம் செய்தார். இவர் பேருந்தில் ஏறும்போது 2 பெட்டி காய்கறிகளைக் கொண்டு சென்றார். இதனால் தனியாக 600 ரூபாய் கொடுக்க வேண்டும் என நடத்துனர் கூறிய நிலையில் விதிகளில் 15 கிலோ வரை பொருட்களைக் கொண்டு செல்லலாம் என இருக்கிறது என்று பயணி கூறினார்.
ஆனால் இதனை ஏற்காத பேருந்து ஊழியர்கள் அவரை மதுரை மாவட்டம் மேலூர் அருகே வந்தபோது வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட சண்முகநாதன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். அதாவது ரெட் பஸ் செயலி நிறுவனம், பேருந்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஆகிய மூவரும் சேர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சட்ட செலவுகளுக்காக மேற்கொண்டு ரூ.15,000 கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்தார்.