சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் விஜய கணேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ப்ரியா வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு கோகுல் (23) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் எலக்ட்ரீசியன் ஆக இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக பிரியா கோகுலுடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதற்கிடையில் கோகுலின் நம்பரையும் அவர் பிளாக் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சேலம் 4 ரோட்டில் வேலையை முடித்துவிட்டு நின்று கொண்டிருந்த பிரியாவிடம் கோகுல் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பிரியாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைதான கோகுலிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது பல தகவல்கள் தெரியவந்தது. அதாவது பிரியாணி கடைக்கு சாப்பிட சென்றபோது கோகுலுக்கு பிரியா உடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது பிரியாவுக்கு கணவர் இல்லை என்று தெரிந்ததால் அவர் மீது பரிதாபப்பட்டு திருமணம் செய்து கொள்ள கோகுல் விரும்பியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென ப்ரியா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவருக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் அதை விட்டுவிடுமாறு நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்காமல் தான் தொடர்பு வைத்திருந்த நபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமாறு அழைத்தார். இதனால்தான் கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டினேன் என்று கூறியுள்ளார். இவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.