கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வரும் நிலையில் திருநாவுக்கரசு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கும் போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும் நண்பரின் மகளான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதால் கடந்த ஜூலை எட்டாம் தேதி நண்பரின் மகளான 16 வயது சிறுமியை போலீஸ் குடியிருப்புக்கு வரவழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட உதவி மையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசு மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.