
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறைமுகமாக அமல்படுத்துகிறது என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி பணிநீக்க காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக தெரிவித்துவிட்டு மறைமுகமாக அதனை அமல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் ஆசிரியர்களை பொறுத்தவரை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.