சென்னை மாவட்டம் அடையார் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இந்த நிலையில் பூபதி தனக்கு சொந்தமான மனையை அவ்வபோது நண்பர்களுடன் வந்து பார்த்துவிட்டு சுத்தம் செய்துவிட்டு செல்வார். கடந்த 13-ஆம் தேதி பூபதி தனது நண்பர்களான பாஸ்கர், விஷ்ணு ஆகியோருடன் இணைந்து மனையை சுத்தம் செய்துவிட்டு மாலை 6 மணிக்கு ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான கலையரங்கில் அமர்ந்து மது குடித்தனர். அந்த சமயம் மேலையூர் கிராமத்தை சேர்ந்த சரண்குமார் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அவரை கூப்பிட்டு பாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த பாஸ்கர் சரண்குமாரின் தாய் பற்றி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவரை பாஸ்கரின் நண்பர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அன்று நள்ளிரவு நேரம் மீண்டும் அதே பகுதிக்கு திரும்பி வந்த சரண்குமார் பாஸ்கரை மரக்கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்றார். மறுநாள் காலை பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாஸ்கர் உயிரிழந்தார். இதனால் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து சரண்குமாரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.