திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டியின் மகனான சின்னதுரை (20), கடந்த 2023ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்தபோது வேறு சமுதாய மாணவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டார். அந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சின்னதுரை மீண்டும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரை திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் அருகே அடையாளம் தெரியாத நால்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கிய நபர்கள் பணம் கேட்டும், அதை வழங்காததால் கட்டையால் தாக்கியதும், அவரின் செல்போனைப் பறித்துச் சென்றதும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சின்னதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் கூறியதாவது, “சின்னதுரைக்கு பெரிய காயம் எதுவும் இல்லை. பழைய இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் நம்பிக்கையுடன் சென்றவர் வழிப்பறிக்கு இலக்காகியுள்ளார். இது சாதி மோதல் சம்பவம் அல்ல” எனத் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது எனவும் கூறினார்.

தற்போது சின்னதுரையின் வீட்டில் காவல் பாதுகாப்பு அமையப்பட்டுள்ளது. இது வழிப்பறி சம்பவமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போலீசார் அந்த நால்வரையும் பிடிக்க சிசிடிவி காட்சிகள் மற்றும் டெக்னிகல் ஆதாரங்களை வைத்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.