
சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டுமே எப்போதும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதற்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. பெண்களின் பாதுகாப்புக்காக பெண் தலைவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதற்கு கூட அனுமதி கிடையாது. தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்ட நிலையில் அதற்காக கவர்னர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் அவரை எதிர்த்துப் போராட எல்லா இடங்களிலும் அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் போராட்டம் நடத்தும்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. அதுவே திமுக போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் முன்னதாக சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாததோடு தடையை மீறி போராட்டம் நடத்திய குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.