
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்த நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்ததால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு தனியார் திருமண மண்டப திறப்பு நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது என்றார். அதாவது கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் நீங்கள் எப்போது முதல்வராகவீர்கள் என்ற கேள்வியை சுட்டிக்காட்டிய அவர் எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது என்று பேட்டியளித்தேன்.
அப்படி எனில் நானே முதல்வர் நாற்காலியில் சென்று அமர்வேன் என்பது அர்த்தம் கிடையாது. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் அதற்கான அர்த்தம். இன்று நாம் அதற்கான முதல் புள்ளியை வைத்துள்ள நிலையில் கோலம் போடுவதற்கு இன்னும் காலங்கள் இருக்கிறது. அதன் பிறகு அரசியல் கட்சியை தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கட்சி தொடங்கியவுடன் பலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். தவிர்க்க முடியாத சக்தியாக அரசியலில் விசிக வளர்ந்து வருகிறது என்று கூறினார். மேலும் எனக்கு முதல்வராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது என்று திருமாவளவன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.