
அமெரிக்காவில் ராகுல் காந்தி சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர் இந்தியாவிற்கு எதிராக பேசி வருவதாக பாஜக ராகுலை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது பிரதமர் மோடியை நீங்கள் வெறுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் ஒருபோதும் பிரதமர் மோடியை வெறுத்தது கிடையாது. அவருக்கென ஒரு தனி கண்ணோட்டம் உள்ளது.
அவருடைய அந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் உள்ள கருத்துக்கு தான் நான் உடன்படவில்லை. எங்கள் இருவருக்குமான கண்ணோட்டங்கள் முற்றிலும் மாறுபட்டது என்றார். அதன்பிறகு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நேர்மையான முறையில் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் 240 இடங்களை பாஜகவால் வென்றிருக்க முடியாது. இந்தியாவில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மேலும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டால் நாட்டில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டிய அவசியமே இருக்காது என்று கூறினார்.