திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல செங்கம் பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அவருடைய மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் தன் மகனுடன் ஜெகதீஷ் வீட்டில் இருந்தார். அப்போது அவர் தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது விளையாட்டுக்காக சாகப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதாவது தான் சாகப்போகிறேன் என்று கூறினால் மகன் என்ன செய்வான் என்று தெரிந்து கொள்வதற்காக விளையாட்டுக்காக அப்படி அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் கட்டிலில் படித்துக் கொண்டே மின்விசிறியில் புடவையை போட்டு கழுத்தில் சுருக்கு மாட்டி உள்ளார். அதற்கு முன்னதாக அதனை தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய ஆன் செய்து வைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக சுருக்கு போட்டது கழுத்தை இறுக்கிக் கொண்டது. அவர் அதனை அவிழ்க்க முயற்சித்தார். இருப்பினும் முடியவில்லை. இதனால் அவர் தன் குழந்தை கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தன் தந்தை அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த குழந்தை உடனடியாக மூச்சு இருக்கிறதா என்று பார்க்கிறான். ஆனால் மூச்சு இல்லாததால் உடனடியாக கழுத்தில் இருந்த சுருக்கை  அவிழ்க்க முயல்கிறான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது. மேலும் விளையாட்டுக்காக கழுத்தில் சுருக்கு மாட்டி அதுவே பின் விபரீதமாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.