தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் முருகமணி. இவரது மகள் தேவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அவ்வப்போது தேவிக்கும் அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாயுடன் தகராறு ஏற்பட்டபோது தேவி நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார்.

உடனே தேவியின் தாய் தனது மகளை பிடிப்பதற்காக பின்னால் ஓடி சென்றார். அப்போது வீட்டிற்கு அருகே திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தேவி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.