
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரான அனுமோகன் சமீபத்தில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு அதிசயமான ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த காலத்தில், நடிப்பில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து வந்த அவர், ஒரு நண்பரின் ஹோட்டலில் இருந்தபோது, விசித்திரமாக வந்த ஒருவர் திடீரென அவரிடம், “நீ இன்றிலிருந்து 10வது நாளில் மதியம் 12.06 முதல் 1.06 வரை சிறையில் இருப்பாய்” எனக் கூறியதாக தெரிவித்தார்.
அந்த நபரின் தோற்றம் சாமியார் அல்லது ஜோதிடராக தெரியாத நிலையில், அவர் சொன்னதைக் கேட்டு கோபம் கொண்ட அனுமோகன், அவரை திட்டியதாகவும், ஆனால் அந்த நபர் சொல்லியே தீருவேன் என்று வற்புறுத்தியதாகவும் கூறினார்.
இதற்குப் பிறகு அந்த விவகாரத்தை அனுமோகன் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
அந்த நபர் சொன்னபடி, 10வது நாள் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில் எம்ஜிஆரின் பந்த் அறிவிப்பிற்கும், கருணாநிதியின் 144 தடை உத்தரவிற்கும் நடுவில், அனுமோகன் நண்பர்களுடன் வெளியே சென்றபோது போலீசால் கைது செய்யப்பட்டார்.
ஐந்து பேர் ஒன்றாகச் செல்வது சட்டவிரோதம் என்ற காரணத்தால், அவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நேரம் 12.06. பின்னர் ஒரு காவல் அதிகாரியின் உதவியுடன் 1.06 மணிக்கு வெளியே வந்ததாக கூறியுள்ளார்.
இந்த அனுபவம் தனது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாததாகவும், அது ஒரு பக்தி மனப்பான்மையுள்ள நபருக்கே ஏற்படும் கடவுள் செய்தி எனவும் அனுமோகன் கூறினார்.
“அன்று யாரோ ஒருவர் கடவுள் ரூபத்தில் வந்து எனக்காக எச்சரிக்கை செய்தார். இதுபோன்ற விசித்திரங்கள் அனைவருக்கும் நிகழாது, உண்மையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே” என்றார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.