சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ள நிலையில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. கூட்டணியை நம்பித்தான் முதல்வர் ஸ்டாலின் தேர்தலை சந்திக்கிறார் மற்றும் நடத்துகிறார். ஆனால் அதிமுக அப்படி இல்லை. அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் என்னை ஜோசியக்காரர் என்று கூறுகிறார். ஆனால் என்னுடைய ஜோசியம் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு பலிக்கும். வருகிற சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் முன்னதாக திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரை அந்த கூட்டணி நீடிக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொள்கைகள் காரணமாக விவாதங்கள் ஏற்படலாமே தவிர கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ஜோசியக்காரர் போல் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று கூறுகிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க சிலர் காத்திருப்பது போல் எப்போது கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி காத்திருக்கிறார் என்று விமர்சித்தார். மேலும் அதற்குத்தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.