நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதில் வழங்கினார். அதாவது ஒரு மாநிலத்தின் பெயர் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதால் அந்த மாநிலத்திற்கு நிதி செல்லவில்லை என்பது அர்த்தம் கிடையாது. இது சம்பந்தமாக தவறான புரிதலோடு சிலர் கருத்துக்களை கூறுகிறார்கள். இந்த கருத்து எனக்கு ஆழ்ந்த வருத்தங்களை தருகிறது. கடந்த 2005-06 ஆம் நிதி ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது 6 மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. இதே போன்று கடந்த 2006-07 ஆம் நிதி ஆண்டில் 13 மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. அதன் பிறகு கடந்த 2008-09 ஆம் நிதியாண்டிலும் 13 மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2009-2010 ஆம் நிதியாண்டில் 26 மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாததோடு, கடந்த 2009-ல் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெயர்களை தவிர வேறு எந்த மாநிலங்களிலின் பெயர்களையும் குறிப்பிடவில்லை.

நீங்கள் செய்தால் தவறு கிடையாது அதுவே நாங்கள் செய்தால் தவறா.? பட்ஜெட்டில் எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கவில்லை. இருப்பினும் 2 மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது. இந்த பட்ஜெட்டில் கேரளாவிற்கு மட்டும் ரூ.9000 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். மேலும் கடந்த 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டுகள் ஆட்சியில் வெறும் 2.9 கோடி  வேலை வாய்ப்புகள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.