சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வரையிலான சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாலேயே சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு தான் ரயிலில் பயணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச்சாலை பணிகளை விரைவு படுத்தவும், பராமரிக்கவும் கோரிக்கை விடுத்து மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வரை இருக்கும் NH4 சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர் அதன் காரணமாகத்தான் சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு தான் ரயிலில் செல்ல நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் எம்பி தயாநிதி மாறன் முன்வைத்த கோரிக்கை முக்கியமாக இருந்த போதிலும் மத்திய அமைச்சர் நிதி கட்கரி அளித்த பதில் ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்தார். அத்துடன் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட குறிப்பிட்டார். நெடுஞ்சாலை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் விரைவுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.