
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடு திரும்பச் சொல்லும் உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த மரியம் என்ற பெண், இந்தியாவை விட்டு வெளியேற மறுத்துள்ளார். பிப்ரவரி 24, 2025 அன்று சுற்றுலா விசாவில் இந்தியா வந்த மரியம், புலந்த்ஷாஹரைச் சேர்ந்த ஆமிர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது மூன்றாம் மாத கர்ப்பிணியான அவர், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக வேண்டிக் கொண்டு, தன்னையும் தனது குடும்பத்தையும் இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
29 வயதான மரியம், “ஒரு காலத்தில் நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன், ஆனால் இப்போது நான் இந்தியாவின் மருமகள்” எனக் கூறியுள்ளார். “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து கொடிய நஷ்டத்தை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதிலும் நான் ஒருபோதும் எதிர்ப்பில்லை. ஆனால் என் மீது எந்தத் தவறும் இல்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்த நிலையில் என் கணவரை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குப் போக முடியாது” என அவர் உருக்கமாக தெரிவித்தார். விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், மரியம் தற்போது புலந்த்ஷாஹரில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மரியம் தற்போது நீண்ட கால விசாவிற்காக மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். புலந்த்ஷாஹர் எஸ்.பி. தினேஷ் குமார் சிங் இதனை உறுதி செய்துள்ளார். மரியத்திடம் வெளியேறும் விண்ணப்பப் படிவம் பெறப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் அடுத்த உத்தரவை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார். மரியத்தின் மனநிலையும் உடல்நிலையும் கருத்தில் கொண்டு, இறுதி முடிவை அரசு எடுத்துவைக்கும் வரை அவர் புலந்த்ஷாஹரில் தங்கவைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.