
உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள நை பஸ்தியில் நடந்த கொடூரமான சம்பவம் வன உயிரியல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது. 10 வயது சிறுவன் ஒருவரை நோக்கி நாய் ஒன்று குரைத்தது காரணமாக, சிறுவன் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவனின் தந்தையான அமித் என்பவர், அந்த நாயை குச்சியால் அடித்ததோடு மட்டும் நிற்காமல், தனது காரில் நாயை கட்டி வைத்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக நாய் உரிமையாளர் ஷோபா ராணி புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 4 வயதான நாய் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருப்பதாக ராணியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெள்ளிக்கிழமை அமித்தை கைது செய்துள்ளனர். மேலும், வன்முறையில் பயன்படுத்தப்பட்ட காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அமித் தனது மகனை நாய் கடித்ததால் தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக போலீசாரிடம் வாதிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.