சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் புறத்திலிருந்து திடீரென ஒரு நாய் காரின் குறுக்கே வந்தது. இதனை கண்ட சிவா, நாயை காப்பாற்ற காரை திருப்பினார். அப்போது எதிர்பாரத விதமாக சாலையின் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த மகா ஸ்வேதா, லிங்கேஸ்வரன், பவித்ரா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சிவா மற்றும் கார்லைன் பால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு கார்லைன் பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.