
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் நாளை, ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது.
இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 21ஆம் தேதி முதல் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.
இதுவரை 10,000க்கும் அதிகமானோர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத ஓட்டுநர் அனுபவம், முதலுதவி சான்று, செல்லத்தக்க நடத்துநர் உரிமம், பொதுப்பணி வில்லை ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.590, மற்றோர் பிரிவினருக்கு ரூ.1,180 என விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சிலரிடமிருந்து வந்துள்ளன. ஆனால் இதுவரை அரசு அதற்கு முடிவெடுக்கவில்லை. விண்ணப்ப பதிவு முடிந்ததும், எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகவே தேர்வு நடைபெறும்.
தேர்வுகள் தொடர்பான முழுவிவரங்கள் அந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளோர், இந்த வாய்ப்பை தவறவிடாமல் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.