துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதுவரையில் இரு நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 48000 கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் நேற்றோடு முடிவடைந்து உள்ளது.

இந்த நிலையில் துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் தில்ஹானி சந்திரகுமார் என்ற இலங்கை பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் மேல் தளத்தை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடைக்கலம் தந்து உதவி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “எனது வீட்டின் மேல் தளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்கள் வரை தங்கியுள்ளனர். இந்த செயலால் எனக்கும் எனது கணவருக்கும் கிடைக்கும் பலன் என்னவென்றால் மனமகிழ்ச்சி தான். மனிதநேயத்துடன் நாம் அனைவரும் இருக்க வேண்டும். மேலும் இந்த கஷ்டமான நேரத்தில் ஒருவரின் உயிரை விட பணம் முக்கியம் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.