தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். குறிப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை சில சமயங்களில் வாயை கொடுத்து வசமாக மாட்டிக் கொள்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை பேசுவது சர்ச்சையாக மாறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும் நிலையில் தற்போது கர்நாடக அரசியலிலும் அண்ணாமலையால் புது குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் கர்நாடக மாநிலத்தின் எம்பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்சி கதவை தவறுதலாக திறந்து விட்டார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேஜஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டது. அதன் பிறகு விமான நிலைய அதிகாரிகள் தேஜஸ்வி சூர்யா தான் செய்த தவறுக்கு  பயணிகள் மற்றும் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தவறுதலாக கை வைத்ததால் எமர்ஜென்சி கதவு திறந்ததாகவும் கூறினார்கள்.

அதன் பிறகு விமான போக்குவரத்து துறை அமைச்சரும் தேஜேஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தேஜஸ்வி சூர்யா படித்தவர். அவர் விமானத்தின் கதவை திறக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர் தவறு செய்யவில்லை. இருப்பினும் எம்பி என்ற காரணத்தினால் மன்னிப்பு கேட்டிருந்தார் என்று கூறினார். இதை அண்ணாமலை தமிழ், ஆங்கிலம், கன்னடம் என மூன்று மொழிகளில் பேட்டியாக அளித்துள்ள நிலையில் தற்போது கர்நாடக அரசியலில் புதிய சிக்கல் வந்துள்ளது.

அதாவது தேஜஸ்வி சூர்யாவை தான் செய்த தவறை ஒப்புக்கொண்ட நிலையில் அண்ணாமலை தவறை செய்யவில்லை என்று கூறியது ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் அண்ணாமலை சர்ச்சையாக பேசி சிக்கிக் கொள்வது போதாது என்று கர்நாடக அரசியலிலும் செல்வாக்காக இருக்கும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.