மதுரை மாவட்டம் முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்(23), ஜாக்கி என்ற பிரசாந்த்(22). சகோதரர்களான இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு 25 கிலோ கஞ்சாவுடன் முனியாண்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டிற்குள் பதுங்கியிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் பாண்டியராஜன் மற்றும் பிரசாந்த்தை கைது செய்தனர் மேலும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த பாண்டியராஜனின் மனைவி சரண்யாவையும் (20) சேர்தாது போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரின் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மூவரும் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த போது மூவரும் போதை பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது.

எனவே வழக்கினை விசாரித்த நீதிபதி மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஆளுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிபதி அளித்த தீர்ப்பை கேட்டு கோபமடைந்த சகோதரர்கள் இருவரும் நீதிமன்றத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இருவரையும் மடக்கிப்பிடித்தனர்.

ஆனால் பாண்டியராஜனும், பிரசாந்தும் போலீசாரிடமிருந்து தப்பி சென்று நீதிபதியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் நாங்கள் சிறைக்கு சென்று விட்டு வெளியே திரும்பும் போது என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள் எனவும் மிரட்டியுள்ளனர். பின்பு தங்களை பிடித்து வைத்திருந்த போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் போலீசார் இருவரையும் இறுக்கிப்பிடித்தபடியே போலீஸ் வேனில் ஏற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தினுள் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.