
நாட்டில் கடுமையான வெப்ப அலை நிலவும் நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உட்பட மொத்தம் 61 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உட்பட மொத்த 61 பேர் நேற்று ஒரே நாளில் கடும் வெப்ப அலையின் காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் முறையான திட்டமிடல் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்புகளை தடுக்க முடிந்திருக்கும்.
உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் இனி தேர்தலை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களிலோ ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலோ நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு கடும் வெப்ப அலை நிலவும் நிலையில் ஜூன் 4-ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் போதிய மின்விசிறிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கூடுதல் மின்விசிறிகளை அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.