சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் செந்தில் நகரில் பாலசுந்தரம்(75) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி பாலசுந்தரம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பாலசுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தரம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பர்தா அணிந்த பெண் ஆட்டோவில் சிறிது தூரம் சென்று 2 தெரு தள்ளி இறங்கியது தெரியவந்தது. மேலும் பாலசுந்தரத்தின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சுகன்யா(22) என்ற பெண் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. ஆன்லைன் சூதாட்டத்தில் சுகன்யா 3 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுகன்யா தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்துள்ளார். அதன் பிறகு தான் பாலசுந்தரத்தின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து கடனை அடைக்கலாம் என திட்டமிட்டு திருடியது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.