தென்காசி மாவட்டம் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதர்சன்(25) மற்றும் சுரேஷ்(27). நண்பர்களாகிய இருவரும் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுரண்டைக்கு சென்று விட்டு செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஆய்க்குடி வழியாக வரும்போது சுரேஷ் வண்டியை ஓட்டினார். அதே சமயம் ஆய்க்குடி மண்டகப்படி தெருவை சேர்ந்த முத்துக்குமாரும்(53) ராமையாவும்(60) தங்களது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுரேஷும், ராமையாவும் படுக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் முத்துக்குமாரும், சுதர்சனும் படுக்காயம் அடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.