
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் மாற்று திறனாளிகள் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக மட்டும் தான் கட்சிகள். பாஜக அரசு ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.
அதோடு மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் என்பதற்காக மொழியை திணிக்க பார்க்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மக்களுக்கு நிதி தருவதை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளையும் செய்கிறது.
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக மட்டும் தான் அரசியல் கட்சிகளாக இருக்கும் நிலையில் மற்றவைகள் கட்சிகளே கிடையாது. பாஜகவும் அதிமுகவும் ஒரு அணியில் தான் சேர்வார்கள். நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக்கொண்டு திமுகவை எதிர்க்க பார்க்கிறார்கள்.
நாங்கள் அதையெல்லாம் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார். கலைஞர் கருணாநிதி ஊனமுற்றவர்கள் மாற்றுத்திரன் படைத்தவர்கள் என்பதால் அவர்களை மாற்றுதிறனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்றார்.
ஆனால் தற்போது திமுக கட்சியின் பொதுச் செயலாளரே அவர்களை இழிவு படுத்தி பேசியுள்ளார். மேலும் இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன். அருவருக்கும் பெயர் கொண்டு அழைத்து வந்ததை கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் என பெயரிட்டு அழைத்தார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரையே உச்சரித்து விட்டேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.