உத்தரப்பிரதேசத்தின் சீதாபூரில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், தனது ஐந்து வயது மகளை  கொன்றதற்காக மோகித் மிஸ்ரா (40) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில், இந்த கொடூரக் குற்றத்திற்கான காரணம், சம்பவத்தை விடவும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட கோபம், அவரது மகள் அருகிலுள்ள வீட்டிற்கு சென்று விளையாடியதற்காக ஏற்பட்டது. அந்த வீட்டில் வசிக்கும் ராமுவின் குடும்பத்துடன் மோகித்தின் குடும்பத்திற்கு முன்பு நெருக்கமான உறவு இருந்ததாகவும், ஆனால் சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பங்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோகித், தனது மகளிடம்  அந்த வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்திருந்தாலும், அவள் தொடர்ந்து அங்கே சென்று விளையாடியதாலே, அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 25 அன்று குழந்தை காணாமல் போனதாக மோகித்தே போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் பல்வேறு அணிகளை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நாளில் குழந்தையின் உடலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. மறுநாள் மீதமுள்ள உடல் உறுப்புகள் கிடைத்ததை அடுத்து, இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மோஹித் தான் கொலை செய்தததை ஒப்புக்கொண்டார்.

கொலை நடந்த நாளில், குழந்தை மீண்டும் ராமுவின் வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்ததை பார்த்த மோகித், மிகுந்த கோபத்துடன் குழந்தையை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றதாகவும், அங்கே குழந்தையின் உடையைப் பயன்படுத்தி அவளை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் கூறினார். போலீசார் இந்த கொடூர கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக, விசாரணை அதிகாரிகளை பாராட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக 100க்கும் அதிகமான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.