கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் சிவரஞ்சனி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு வாலிபர் வந்து அவரிடம் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவரஞ்சனி அங்கிருந்து ஓடினார். அப்போது அந்த வாலிபர் சிவரஞ்சனியை துரத்தி சென்று கழுத்தில் கத்தியால் குத்தினார். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில் சிறிது நேரம் ஓடி சென்ற அந்த வாலிபர் தன்னைத்தானே கழுத்தில் குத்தி விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த தகவலின் பேரில் கோட்டார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கணவனை பிரிந்து வாழ்ந்த சிவரஞ்சனிக்கும் ஆண்டனி வினோ என்ற அந்த வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம்  மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த சமயத்தில் திடீரென சீவரஞ்சனி வினோவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகறாறில் வினோ சிவரஞ்சினியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.