
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மேலப்பிடவூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்ற வாலிபர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் புல்லட் பைக் வைத்திருந்தார். இது அந்த பகுதியில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று வாலிபர் தன்னுடைய பைக்கில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் பட்டியலின தாழ்ந்த சமுதாயத்தில் பிறந்துவிட்டு எப்படி புல்லட் பைக் ஓட்டலாம் என்று அந்த மாணவரை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
பின்னர் கோபத்தில் அந்த மாணவனின் கைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த வாலிபர் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கைகளை சேர்க்க தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. அந்த மாணவனின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றுவிட்ட நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வல்லரசு, ஆதி ஈஸ்வரன், வினோத் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.