நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட பொருளாளர் அரசன் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் மாநில துணை செயலாளர் வைகறை செல்வன், குமணன் பாலு மற்றும் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன் போன்றோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசியுள்ளனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தியும் பட்டியலின மக்கள் கோவிலில் வழிபடுவதை தடுப்பவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதற்கிடையே பட்டியலின மக்கள் கோவிலில் வழிபடுவதற்கு கோர்ட் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் கலெக்டர் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.