திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக பெண் பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் பெண் வீட்டில் வசதி இல்லை என்றும் அவருடைய குடும்பத்திற்கு ஒன்றை பவுன் நகை, புரோக்கருக்கு 80 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

ராதாகிருஷ்ணன் பேசிய நகை பணத்தை கொடுத்துவிட்டு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் மனைவியை அழைத்துக்கொண்டு ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சிக்கு சென்ற நிலையில் அங்கு புதுப்பெண் மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ராதாகிருஷ்ணன். இதுகுறித்த விசாரணையில், திட்டமிட்டு ராதாகிருஷ்ணனை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது.புரோக்கர் பெண்ணின் கணவர் என்றும் பணத்திற்காக தன்னுடைய மனைவியை ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்ததும் அம்பலமானது.