
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சேர்ந்தவர் ஜான் சிபு மாணிக். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஜான் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் ஜானை பணி நிரந்தரம் செய்யுமாறு கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஜான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். மேலும் ஜான் இவ்வளவு காலம் வேலை பார்த்ததற்கான நிலுவைத் தொகை 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கும். அதனையும் ஜானிடம் கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் பணி ஆணை மற்றும் நிலுவை தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகியுள்ளார். அப்போது சந்தோஷ் 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேச்சு வார்த்தைக்கு பிறகு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜான் சந்தோஷிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்தோஷை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.