
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதற்காக கார்த்திகேயன் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராணி சம்பவத்தன்று தனது தோழிகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலிலிருந்து வீடு திரும்பியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கார்த்திகேயன் உடல் முழுவதும் மின்சார வயர் சுற்றிய நிலையில் தரையில் இறந்து கிடந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்த கார்த்திகேயனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகப்படியான மன அழுத்தத்தால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.