தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா பாஜக கூட்டணி குறித்து அறிவித்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும்.

இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக தற்போது அதிருப்தியில் இருக்கிறது. அதாவது ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் தேமுதிக மற்றும் அதிமுக இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவிடம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி கூறாதது பிரேமலதா விஜயகாந்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எந்த கூட்டணியிலும் எந்த அணியிலும் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் நாங்கள் எங்களுடைய கட்சி வளர்ச்சியை மட்டும் தான் பார்த்து வருகிறோம். எனவே தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்பதை மட்டும் நான் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.  தேர்தல் சமயத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது உறுதி என்று கூறப்படுகிறது.