இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கண்டிப்பாக வருகிற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். முதலில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சரி செய்யட்டும். அதிமுக எரிந்து கொண்டிருக்கிறது. முதலில் அதை அணைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்யட்டும் என்றார். முன்னதாக சேலத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணி புகைய ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் புயல் வீசும் என்றும் கூறினார்.

அதோடு அடுத்து வரும் தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது என்றும் கூறினார். இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் முத்தரசன் திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதிமுக எரிந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார். அதன்பிறகு சீமான் தமிழ் தாய் வாழ்த்தை நீக்குவேன் என்பது குறித்து கூறியதற்கு கருத்து தெரிவித்த முத்தரசன் சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கட்டும். அதற்கு முன்னதாக தமிழ் தாய் வாழ்த்தை தற்போது மதிக்க வேண்டுமா இல்லையா.? அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து பதில் சொல்லட்டும் என்று கூறினார்.