அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாநிலம், ஃபெயர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பயிலும் 15 வயது சிறுவன் ஒருவர், பள்ளி வளாகத்தில் கத்தியால் தனது சகமாணவரை தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் பாதிக்கபட்ட மாணவர்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, தாக்கிய மாணவர் மீது  தீவிர காயப்படுத்தல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே பள்ளி பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை  ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பள்ளி வாரிய உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை மேம்படுத்த, ஆயுத கண்டறிதல் அமைப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

விர்ஜீனியா மாநில ஜனநாயக சேனட் தலைவர் ஸ்காட் சுரொவெல்லின் மகன் அந்த பள்ளியில் கல்வி கற்றுவருவதால், அவர் தனிப்பட்ட ரீதியாக அந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். “மாணவர்களின் ஆண்டு இறுதிக்காலம், பட்டமளிப்பு விழா போன்ற மகிழ்ச்சியான நேரத்தில் இப்படியான கொடூரம் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது,” என அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு மனநல  ஆலோசனை சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பள்ளி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வலுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.