
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக பேசியதால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மகாவிஷ்ணு கைதுக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பைபிள் விநியோகிக்கப்படுகிறது. கிறிஸ்தவ போதனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை யாரும் கேட்பதில்லை.
இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பரம்பொருள் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் பற்றி பேசி அதற்குரிய விளக்கமும் கொடுத்தார். அந்தப் பள்ளியில் கம்யூனிஸ்ட் தன்மை கொண்ட ஆசிரியர் வேண்டுமென்றே அவருடன் தகராறு செய்து இந்த விஷயத்தை பெரிய சர்ச்சையாக மாற்றிவிட்டார். மகாவிஷ்ணுவை தீவிரவாதி போல் கைது செய்துள்ளனர். மேலும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.