காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களுடன் ஆன அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தானும் ரத்து செய்துள்ளது.

இதனால் இருநாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது போர் பதற்றம் நிலவியுள்ளதால் காஷ்மீரில் இருந்து சுற்றுலப் பயணிகள் உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 10,090 பேர் வெளியேறியுள்ளனர். இதனால் ஸ்ரீ நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதன் காரணமாக விமான கட்டணங்களை உயர்த்த கூடாது என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.