
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இருநாடுகளுக்கிடையேயான பதட்ட நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் ஒளிபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய நிபுணர்கள் பலர் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
PSL போட்டியின் ஒளிபரப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளில் இருந்த இந்திய உள்நோக்கிய தொழில்நுட்பக் குழுவினர் – என்ஜினியர்கள், ஒளிப்பதிவு கலைஞர்கள், பிளேயர்-டிராக்கிங் நிபுணர்கள் உள்ளிட்டோர் – பாகிஸ்தான் அரசு வெளியிட்ட 48 மணி நேரக் காலக்கெடு காரணமாக விரைவில் வெளியேற்றப்படலாம். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பிஎஸ்எல் ஒளிபரப்பில் இடையூறுகள் ஏற்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கவலையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில், FanCode நிறுவனம் பிஎஸ்எல் ஒளிபரப்பை இடைநிறுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை பெற்றுள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். “ISIS காஷ்மீர்” என பெயரிட்ட சந்தேகத்தக்க ஜிமெயில் கணக்கில் இருந்து “I KILL YOU” எனும் வார்த்தைகளுடன் இரண்டு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டிலும் இதுபோன்ற மிரட்டல் பெற்றிருந்த அவர் தற்போது டெல்லி காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளார். மேலும் ஏற்கனவே எல்லைப் பகுதியில் போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.