
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் அந்த அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த பிறகு பலரும் அந்த அணியை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அந்த அணியை கடுமையாக விமர்சித்ததோடு முன்னாள் வீரர்கள் 7 பேரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இளம் வீரர்களை அந்த அணியில் சேருங்கள் என்று கூறினார். அதாவது சமீப காலமாகவே பாகிஸ்தான் அணி மோசமான பார்மில் இருக்கும் நிலையில் இளம் வீரர்களை அணியில் சேர்த்தால் கூட 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறினார். இதற்கு தற்போது ஷாகித் அப்ரிடி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, வாசிம் அக்ரம் கூறியதை நான் கேட்டேன். இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு நாம் அனைவருமே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தோம். பாகிஸ்தான் அணியில் ஆறு முதல் ஏழு வீரர்களை நீக்கிவிட்டு புதிதாக ஏழு வீரர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ள நிலையில் அப்படிப்பட்ட ஏழு வீரர்கள் உங்களிடம் இருக்கிறார்களா.? நாம் அதுபோன்று சிறந்த வீரர்களை உருவாக்கி இருக்கிறோமா.? என்று கேட்டார். இதன்மூலம் பாகிஸ்தான் பயிற்சி மையங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இல்லை என்பதை சாகித் அப்ரிடி போட்டுடைத்தார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பலப்படுத்துவதை விட பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்பதைத்தான் அவருடைய பேச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரர்கள் இல்லை என்பதை அந்த நாட்டின் முன்னணி வீரர்களே போட்டுடைப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.