
நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பாஜக அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார். அதாவது மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டது போன்று பாஜகவின் சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் ஒருவித அச்சத்துடனே காணப்படுகிறார்கள். மகாபாரதத்தில் சக்கர வியூகத்தை துரோணர், அஸ்வத்தாமன் அமைத்தது போன்று தற்போது மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் புதிய சக்கர வியூகத்தை அமைத்துள்ளனர். என்னுடைய உரையை கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் அவர்களுக்குள் ஒருவித பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
மோடியின் ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது. பாஜக ஒருவரை மட்டும் தான் பிரதமராக அனுமதிக்கிறது. ஒருவேளை பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் கண்டிப்பாக அவர் பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனால் பாஜகவின் ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒரு விதமான பயத்துடனே காணப்படுகிறார்கள். மோடி அரசு என்பது வினாத்தாள் கசிவு மற்றும் வேலையின்மையின் அர்த்தமாக மாறிவிட்டது. ஜிஎஸ்டி வரி மூலம் ஒரு வரி பயங்கரவாதத்தை ஒன்றிய அரசு ஏவியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.