
டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவான ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க போவது உறுதியாகி வருகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் தான் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டிருந்தால் டெல்லியில் பாஜக முன்னேறி இருக்காது என்று தற்போது அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூட இருவரும் இணைந்து போட்டியிட்டு இருந்தால் டெல்லி தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்று கூறினார். காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றி பெற போதிய அளவுக்கு வாய்ப்பு கிடையாது என தெரிந்திருந்தும் தனித்து நின்றது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
பாஜக வெற்றி பெற உதவியாக காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு இருந்தால் வாக்குகள் பிரிந்து இருக்காது என்பதே பலரின் கருத்து. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கும் ஆம் அத்மி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.