அசாம் மாநிலத்தில் உள்ள சிவசேகர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ‌11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை திட்டியதோடு வகுப்பறையை விட்டு வெளியேற்றினார். அப்போது வெளியே சென்ற மாணவர் ஒரு கடைக்கு சென்று கத்தி வாங்கி விட்டு வந்துள்ளார்.

அந்த மாணவர் மீண்டும் வகுப்பறைக்கு வந்த நிலையில் ஆசிரியர் திட்டினார். இதனால் கோபத்தில் மாணவன் ஆசிரியரை கத்தியால் சரமாரியாக குத்தினான். இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்து அச்சமடைந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்துள்ளனர்.