தமிழ்நாட்டின் மூத்த அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனின் நினைவு நாளான இன்று ஆர்.எம்.வி.தி கிங் மேக்கர் என்று ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் வீரப்பனின் நினைவுகளை பகிர்ந்த நிலையில் ஜெயலலிதா உடனான பிரச்சனை குறித்து பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்து பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது அந்த படத்தின் தயாரிப்பாளரும் அமைச்சருமான எம்.எம் வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டு நான் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசினேன். நான் அதைப் பற்றி ஒரு புரிதல் இல்லாமல் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வீரப்பனை உடனே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.

இது தெரிந்தவுடன் என்னால் தூங்கக்கூட முடியவில்லை. ஆனால் அவர் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு என்னிடம் வழக்கம் போல் பேசினார். நான் இது தொடர்பாக ஜெயலலிதாவிடம் பேசுகிறேன் என்று கூறிய போது வீரப்பன் அவர் ஒருமுறை முடிவு எடுத்தால் அதனை மாற்ற மாட்டார். எனவே ஜெயலலிதாவுடன் பேசி உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். நீங்கள் சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறினார். இதனால் தான் அவர் ரியல் கிங் மேக்கர்.

மேலும் கடந்த 1996 ஆம் ஆண்டு இதனால் தான் அதிமுகவுக்கு எதிராக தான் பேசியதாகவும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறியதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.